பழம்பெரும் தலைமை

பழம்பெரும் தலைமை
Published on

பழம் நழுவிப் பாலில் விழும்’- எல்லா இடங்களிலும்  தேமுதிக பற்றிய இந்த கருத்து கவனமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. கலைஞரே சொல்லிட்டார்னா, கேப்டன் திமுககூடத்தான் சேர்றாரு.. என்றார்கள் பிரமிப்பாக. கொஞ்சகாலம் அமைதியாக எல்லோரையும் ஆடவிட்டுப்பார்த்துக் கொண்டிருந்த  மூத்த ஆட்டக்காரர் கலைஞர் அடித்த சிக்ஸர் இது! ஆனால் கடைசியில் பழம் நழுவி பக்கக்து இலையில்தான் விழுந்தது. ஆனாலும் இந்த தேர்தலிலும் தன் வருகையை  மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார் இந்த சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கும் 92 வயதுக்காரர்.

4433 பேரிடம் 12 நாட்கள் தொடர்ந்து மாரத்தான் நேர்காணல் திமுகவில் நடைபெற்றது. பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், மு.க.ஸ்டாலின் உடனிருக்க கருணாநிதி, சளைக்காமல் இந்த நேர்காணலை நிகழ்த்தினார். நேர்காணல் நடத்தியவர்களுக்கே நேர்காணலும் நடந்தது. துரைமுருகனும் மு.க.ஸ்டாலினும் நேர்காணலில் அமர்ந்தார்கள். ஸ்டாலின் அமர்ந்த காட்சி, திமுகவில் ஜனநாயகமும் கட்சிஒழுங்கும் இருப்பதாகக் காண்பித்தாலும் பல செய்திகளை சொல்லாமல் சொன்னது.  2016-ல் முதல்வர் வேட்பாளராகச்  சொல்லப்பட்டவர், திமுகவில் பல மாவட்டச் செயலர்களை கையில் வைத்திருப்பவர் என்று கருதப்பட்ட ஸ்டாலினுக்கும் சீட் தருவதா வேண்டாமா என்று முடிவு செய்வது நான் தான் என்று உலகுக்குச் சொன்னார் கருணாநிதி.

சென்ற தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்டவர் இந்த தேர்தலில்  எந்த தொகுதியில் நிற்பார் என்று  ஊகங்கள் தொடர்கின்றன. இது அவருக்கு 13 வது சட்டமன்றத் தேர்தல். அவர் சந்தித்த முதல் தேர்தல் 1957. அன்று அவருடன்  தேர்தலைச் சந்தித்தவர்களில் இன்றும் களத்தில் இருப்பவர் இவர் மட்டுமே. அந்த  களத்தில் இருந்த இன்னொருவர் க.அன்பழகன். அவரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சொல்லிவிட்டார்.

கருணாநிதியை மட்டும் இந்த 14 தேர்தல்களாக சலிப்பில்லாமல் இயங்கச் செய்வது எது?

‘எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டு விட்டு சென்று விடுவோம்’ என்று எப்போதாவது உங்களுக்கு எண்ணம்வந்தது உண்டா? இது சமீபத்தில் ஒரு பத்திரிகை சார்பாக மு.க.விடம் கேட்கப்பட்ட கேள்வி. அவர் தந்த பதில்:

”பாதிக் கிணறு தாண்டும் பழக்கம், எனக்கு எப்போதும் கிடையாது. சிறுவனாக இருந்த போது, நானும், என் நண்பன் தென்னனும், திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்திற்குச் செல்ல முயன்றோம். முக்கால் தூரம் சென்றதும், என் நண்பனால் நீந்த முடியவில்லை. ’திரும்பி விடலாம்’ என்றார். ’திரும்புவதென்றால், முக்கால் பகுதி நீந்த வேண்டும்; மைய மண்டபம் என்றால், கால் பகுதி தூரம் தான் நீந்த வேண்டும்; அதற்கே செல்லலாம்’ என்று நான் கூறி, நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே, எதற்கு இந்த அரசியல்;எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சென்று விடுவோம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை. அரசியல், நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. வாழ்க்கையின் எல்லாப் பாதைகளிலும், குளிர்ச்சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல!’

தென்னனுடன் அவர் குளத்தில் நீந்திய சம்பவத்தை எத்தனை முறை கூறி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட மிகப்பெரிய தன்னம்பிக்கை காவியமாக இந்த சம்பவம் உருவாக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக அவர் சொல்வது மிக முக்கியமானது “அரசியல் நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை!”என்பதாகும். விரும்பித் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து சலிப்பில்லாமல் சென்றுகொண்டிருக்கிறார். ஆனால் அவரளவுக்கு தமிழக அரசியலில் சரிவுகளை சந்தித்தவர்களும் இல்லை. வெற்றிகளைத் துய்த்தவர்களும் இல்லை.

மிகவும் இளம் தலைவராக இருந்த கருணாநிதி அண்ணா மறைவுக்கு பின்பாக திமுகவின் தலைவர் ஆனார். முதல்வராகவும் அமர்ந்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் உச்சம் 1971-ல் அவர் பெற்ற வெற்றி! ராஜாஜி, காமராஜர் ஆகிய தலைவர்கள் ஓரணியில் நிற்க, ஆட்சிக்கு எதிரான உணர்வு ஏற்பட்டிருக்கும் சூழலை மீறிப்பெற்ற இமாலய வெற்றி! அதற்கு இணையான வெற்றியை அவர் பின்னர் பெறமுடியவில்லை. எம்ஜிஆர் பிரிந்து சென்றதால் ஏற்பட்டது அவருக்கு 13 ஆண்டுகள் ஆட்சி பீட இழப்பு; வைகோ பிரிந்து சென்றதால் ஏற்பட்ட இழப்பை கூட்டணி மூலம் ஈடு செய்தார். இன்றைக்கு மகன் அழகிரியின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.

1957-ல் கருணாநிதி தன் முதல் தேர்தலில் நின்றபோது ஜெயலலிதாவுக்கு வயது ஒன்பது. ஜெ. அரசியலுக்கு வரும்போது கருணாநிதி இரண்டு முறை  முதல்வர் ஆகியிருந்தார். ஆனால் இன்றைக்கு அவருக்கு நேரெதிர் எதிராளியாக ஜெ. இருந்துவருகிறார். ஐந்துமுறை நேருக்கு நேர் மோதல்! மூன்றுமுறை தோற்கடிக்கவும் செய்திருக்கிறார். இதோ நான்காவது முறையாக தோற்கடிக்க வியூகம் வகுத்திருக்கிறார் ஜெ. கருணாநிதியின் பதில் வியூகம் எப்படி இருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுடெல்லியிலும் கருணாநிதி சிறந்த ஆட்டக்காரரகவே இருந்து வந்திருக்கிறார். காங்கிரஸ் இரண்டாக பிளவுண்ட பின்னணியில் அவர் இந்திரா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து அவரது ஆட்சி கவிழாமல் இருக்க ஆதரவு தந்தார். நீலம் சஞ்சீவ ரெட்டியும் விவிகிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது சமூகநீதிக் கொள்கைப்படி சஞ்சீவ ரெட்டிக்கு திமுக ஆதரவு அளிக்கவேண்டும் என்று  தமிழகத்தில் கோரப்பட்டபோதும், இந்திராவின் வேட்பாளரான வி.வி. கிரிக்கு ஆதரவு தந்தார். அதுதான் நீண்டகால நோக்கில் திமுகவுக்கு நல்லது என்று கருதினார். ஆனால் இந்திராவுடனான கூட்டு கசந்தது. எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க அவர் தயங்கவில்லை. எமர்ஜென்சி முடிந்து உருவான ஜனதா கட்சி ஆட்சியில் திமுகவுக்குப் பங்கிருக்கவில்லை. இருப்பினும் அந்த ஆட்சி காலாவதி ஆனபின்னர் 1980-ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது இந்திராவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி வைத்துக்கொண்டார். ஆனால் அரசுசூழ்தல்கள் ஓரளவுக்கு மேல் பலன் தருவதில்லை. எம்ஜிஆரின் ஆட்சியை டெல்லியைப் பயன்படுத்தி கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தபோது தோல்வியையே கண்டார். அதன்பின்னர் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போன்ற மத்திய அணிகளில் முக்கிய பங்கு வகித்தது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி என பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் டெல்லியில் திமுக வலிமையுடன் இருந்திருக்கிறது. 2 ஜி ஊழல், இலங்கைப் பிரச்னை ஆகியவற்றைத் தாண்டி இன்னமும் காங்கிரசுடனான உறவை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதில் மிகக்கூர்மையான அரசியல் ஆட்டக்காரரின் மனநிலை பிரதிபலிக்கின்றது.

அரசு சூழ்தலில் மட்டும்தான் கருணாநிதி வல்லவரா? கொள்கைகள், திட்டங்கள், நிர்வாகம் ஆகியவை என்னவாகிற்று எனலாம். இந்த விஷயத்தில் கருணாநிதியின் பாதையைப் பார்த்தால் கலவையான முடிவுகளே தென்படுகின்றன.

“இன்றைக்கு மதுவிலக்கு கொண்டுவருவோம் என்கிற கருணாநிதிதான், 1971-ல் மதுவிலக்கை அகற்றியவர். ஆனால் அதை அவரே இரு ஆண்டுகளில் திரும்பக் கொண்டுவந்துவிட்டார் என்பது உண்மைதான். ஆயினும் மதுவிலக்கை அகற்றும் யோசனையை பின்னால் வந்த ஆட்சியாளர்களுக்கு அளித்தது அவரது நடவடிக்கையே.   மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழு, மத்தியில் கூட்டாட்சி, மாநில சுயாட்சி என்ற கொள்கை, இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு போன்ற கொள்கைகள் இவற்றின் மீது கட்டப்பட்ட கட்சி, கடந்த பதினைந்து ஆண்டுகளில் மெல்ல தேசியக் கட்சியாகப் பரிமாணம் பெற்றது. கொள்கை நீக்கம் செய்யப்பட்ட கட்சி அரசியல் கோலோச்சுகின்ற தமிழ்நாட்டில் திமுகவையும் அதற்கேற்ப மாற்றி அமைத்திருக்கிறார் என்றே சொல்லமுடியும். அதற்கு பாஜகவுடன் 1999-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் அவர் வைத்துக்கொண்ட சமரசக்கூட்டணியும் சாட்சி” என்று சுட்டிக்காட்டுகிறார் ஒரு அரசியல் விமர்சகர்.

இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலில் இருக்கும் புதிய தலைமுறையினர் ஈழப்பிரச்னையை முன்வைத்து தங்கள் ஆத்திரங்களை இவர்மீது குவித்தனர். அவர் செயலாற்றிய மைய அச்சு இளம் தலைமுறையினரால் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருப்பது பெரிய சறுக்கல்தான்!

எதிலும் நீண்டகாலம் தாக்குப் பிடித்திருப்பதில் இருக்கும் ஒரே சிக்கல் எதற்கெடுத்தாலும் தானே பலிகடா ஆக்கப்படுவதுதான். இன்றைக்கு தமிழ்நாட்டில் எந்த அரசியல் சிக்கல் என்றாலும் கூசாமல் கைகாட்டப்படுகிறவர் அல்லது முதல் களப்பலி ஆக்கப்படுகிறவர் கருணாநிதிதான். ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சியில் 18 ஆண்டுகள்தான் அவரால் முதலமைச்சராக இருக்கமுடிந்தது. ஆனால் வளர்ச்சிக்கு சுட்டிக்காட்டப்படுகிறாரோ இல்லையோ நசிவுக்குக்  கூசாமல் கைகாட்டப்படுகிறார். கருணாநிதி போட்டியிட்ட காலத்தில் இருந்து இன்னும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குகிற இருவர் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லக்கண்ணு! கருணாநிதியை விட ஒரு வயது குறைந்தவர்! இன்னொருவர் தா.பாண்டியன் எட்டு வயது சின்னவர். இடதுசாரி அரசியலில் இவர்களும் 1950களில் இருந்து ஈடுபடுகிறவர்களே. திராவிட அரசியல் வென்றது. இடதுசாரி அரசியல் தோற்றது. இதற்கு முக்கிய காரணம் இடதுசாரி அரசியலின் கூறுகளையும் திராவிட இயக்கம் செரித்துகொண்டது என்பதே. இது நீண்ட விவாதத்துக்குரியது. தானும் கம்யூனிஸ்ட்டுதான் என்று கருணாநிதி அடிக்கடி சொல்லிக்கொள்கிறவர் என்பதை இங்கே சொன்னால் மட்டும் போதுமானது.

காய்த்த மரங்களே கல்லடி படுகின்றன. அரை நூற்றாண்டாக கல்லடிகளைத் தாங்கிக்கொண்டு கனிந்தவராக இருக்கிறார் அவர்! அவரது கனிகளை உண்டவர்களாக தமிழகத்தின் நான்கு தலைமுறைகள் இருக்கின்றனர். திருக்குவளையில் இருந்து புறப்பட்ட ஒரு சிறுவனின் ஆகச்சிறந்த சாதனை இதுவே!

ஏப்ரல், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com